Saturday, January 10, 2015

மலையாள சினிமா உலகம் - 1

       

          பொதுவாக சினிமாவில் வரும் கதைகளும் , காட்சிகளும் , கதாபத்திரங்களும் அந்த மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பவை  ஆகும்.  அந்த வகையில் மலையாள சினிமாக்கள் என்னை மிகவும் ஈர்த்தவை.  இந்தியாவின் தலைசிறந்த சினிமா கலைஞர்களும், நடிகர்களும், பாடகர்களும் இன்த மண்ணில் உள்ளனர் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று, அனால் தலைசிறந்த ரசிகர்களை கொண்டுள்ளது இந்த மலையாள சினிமா உலகம். நான் மிகவும் பெருமைப்படும் அவர்களின் பண்பு என்னவென்றால், ஒரு நடிகனுக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாட்டை மிக தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். நம் ஊரில் ஒரு நடிகனின் இரண்டாவது படம் வெற்றிபெற்றுவிட்டால் அடுத்தமுதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகிறார்கள்.  ஆனால் ஒரு நல்ல நடிகனின் தகுதி வேறு, ஒரு நல்ல அரசியல் வாதியின் தகுதி வேறு, எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் எங்கும் ஒரு நடிகனால் அவரைப்போல் அரசியலில் கோலோச்ச முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 

    இன்னொரு நல்ல விஷயம், இங்கு தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டமடைந்து தற்கொலை செய்வதில்லை, காரணம் பெரும்பாலான படங்களின் பட்ஜெட் அதிகபட்சம் 5 கோடி, மமூட்டி, மோகன்லால் படங்கள் உட்பட. எல்லா கதாநாயகர்களும் வருடத்திற்கு சராசரியாக 5 படங்கள் நடிக்கின்றனர். இதில் ஜெயசூர்யா, ஆசீப் அலி, அனூப் மேனன், பாஹாத் பாசில் போன்றோர் நாயகர்களாக நடிப்பது மட்டும் அல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாயகர்களாகவும் நடிப்பது ஆச்சர்யம். மலையாள சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகர்கள் சேர்ந்து நடிப்பதென்பது இயல்பான ஒன்று. இரு பெரும் நட்சத்திரங்களான மமூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து இதுவரை 33  படங்களில் நடித்துள்ளனர்.

    பெரும்பாலான படங்களில் யதார்த்தமான கதைகளும், கதபதிரங்களும் கொண்டிருக்கும். ஒரு படத்தில் அறிமுக பாடல், சண்டைக்காட்சி பார்ப்பது அரிது (சமீபத்திய சில திலீப் படங்களை தவிர்த்து). அதிலும் மலையாளம் தெரிந்த நடிகைகள்  கதாநாயகிகளாக நடிப்பது பெரும் பாக்கியம் (சில தமிழ்பட கனவு கண்ணிகள் டப்பிங் அரங்கையே பார்த்திராதது பெரும் கொடுமை ). சில  நடிகர்களை இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் சித்திக், ஜகதீஸ், சாய், இன்னொசென்ட் போன்றோர்கள் எத்தனை வகையான பத்திரங்களை ஏற்கின்றனர்? அவர்களின் திறமையையும் படம் தேர்ந்தெடுக்கும் விதமும் பாராட்டுக்குரியது. நம்ம தமிழ் சினிமாவில் சிரிப்பு போலீஸ் மற்றும் அரசியல்வாதி என்றால் அது தியாகு அவர்கள்தான்,  இவர் நடித்த படங்களில் என்பது சதவீதம் ஒரேமாதிரி கதாபத்திரங்கள், இவரைபோல் பலர் தமிழ் சினிமாவில்.

தொடரும்.....